மாசு கட்டுப்பாடு அலுவலகம் திறப்பு விழா எப்போது?
பல்லடம்; திருப்பூரில், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் வாயிலாக, மாசு ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வடக்கு அலுவலகம் திருப்பூரிலும், தெற்கு அலுவலகம் பல்லடத்திலும் செயல்பட்டு வருகிறது. பல்லடத்தில், பழைய பொள்ளாச்சி பைபாஸ் சாலையில் உள்ள திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. வாடகைக்காக மட்டுமே பல லட்சம் ரூபாய் செலவாகி வரும் நிலையில், கோவை- - திருச்சி ரோடு, பெரும்பாளி பகுதியில் உள்ள அரசு நிலத்தில், புதிய மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலக கட்டடம் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கட்டட கட்டுமான பணிகள் முடிவடைந்தும், திறப்பு விழா செய்யப்படாமல், மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கட்டி வைத்த அழகு பார்க்கப்பட்டு வரும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம், மாசடைந்து வருகிறது. எனவே, புதிய கட்டடத்தை திறப்பு விழா செய்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.