நாய்களுக்கான கருத்தடை மையம் பல்லடத்தில் அமைவது எப்போது?
பல்லடம்: பல்லடத்தில், நாய்களுக்கான கருத்தடை மையம் அமைப்பது எப்போது? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீப காலமாக, நாய்களின் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தெரு நாய்களால் ஏற்படும் பிரச்னைகள், பொதுமக்களை பெரிதும் பாதிக்க செய்கிறது.இவ்வாறு, பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, கால்நடைத்துறை சார்பில், கருத்தடை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, பல்லடம், வடுகபாளையம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில், நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கால்நடைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டும், இன்று வரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாய்கள் கருத்தடை மையத்துக்காக பிரத்யேக டாக்டர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட உள்ளதால், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நகராட்சி ஊழியர்கள் மூலம் நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட உள்ளது. எனவே, இதற்காக நியமிக்கப்பட உள்ள நகராட்சி ஊழியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தெரு நாய்கள் என்றாலும், அவற்றை கண்ணியமாக நடத்துவது, நாய்களை எவ்வாறு பிடிப்பது? கருத்தடைக்குப் பின், பிடித்த இடத்திலேயே அவற்றை மீண்டும் விடுவது என்பது உள்ளிட்ட அறிவுரைகள், பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம், தாராபுரம், அவிநாசி பகுதிகளில் முதல் கட்டமாக, கருத்தடை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு, இரண்டாவது கட்டமாக, பல்லடத்திலும் கருத்தடை மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.