உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஈரோடு - பழநி ரயில் பாதை திட்டம் துவங்குவது எப்போது?

ஈரோடு - பழநி ரயில் பாதை திட்டம் துவங்குவது எப்போது?

திருப்பூர்:''ஈரோடு - பழநி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கனவு திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும்,' என்பது மூன்று ரயில் பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.பழநியில் இருந்து தொப்பம்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாராபுரம், நல்லிமடம், ஊதியூர், காங்கயம், சென்னிமலை, ஈங்கூர் வழியாக ஈரோடை இணைக்க, 91.5 கி.மீ., புதிய ரயில் பாதை அமைக்க, 50 ஆண்டுகள் முன் ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2002க்கு பின், மத்திய அரசு அதிகாரபூர்வ ஒப்புதல் வழங்கியது.சர்வே பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு, திட்ட மதிப்பீடு, 380 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. ஆறு பெரிய பாலம், 42 சிறிய பாலம், 23 ரயில்வே கேட் அமையுமென அறிவிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் ஈரோடு - பழநி ரயில்வே திட்டத்துக்கென குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு முறையும் ஒதுக்கப்படுகிறது.தற்போது வெளியான மத்திய இடைக்கால பட்ஜெட்டில், ஈரோடு - பழநி புதிய ரயில்வே திட்டத்துக்கென, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.நிதி ஒதுக்கீடு ஒருபுறம் இருந்தாலும், திட்டம் எந்த நிலையில் உள்ளது; சர்வே பணிகள் முழு அளவில் முடிந்து விட்டதா; நிலம் கையகப்படுத்துவதில் தாமதமா உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை.ரயில் பயணிகள் கூறுகையில், ''முதல் கட்ட சர்வே பணி, 2006ல்; இரண்டாம் கட்ட சர்வே, 2008ல் நிறைவு பெற்றது. மீண்டும் சர்வே, 2018ல் ஒரு முறை நடந்தது. சர்வே பணி முடிந்ததால், தான் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக, ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். திட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ