மேலும் செய்திகள்
போலீஸ் டைரி:மின் கசிவால் தீ விபத்து
22-Oct-2025
காங்கயம்: காங்கயத்தின் பாரம்பரிய அடையாளமான காங்கயம் காளைக்கு நினைவுச்சிலை அமைக்க வேண்டும் என்ற, மக்கள், விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வருகிறது. கரிய நிறம், கூரான கொம்புகள், மலை போன்ற திமில்கள், களிற்றிக்கீடான கம்பீர தோற்றம் என காண்போரை மிரளவைக்கும் காங்கயம் இன காளைகள் உலக பிரசித்தி பெற்றவை. அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் உட்பட புகழ் பெற்ற ஜல்லிகட்டுகளில் தமது பிடிபடாத ஆற்றலினால் புகழ் சேர்ப்பவை. கடும் வறட்சியையும் கூட தாங்கி குறைவான தீவனத்தை உட்கொண்டு சத்தான பாலைத்தரும் காங்கயம் இன மாடுகளை மணமுடிக்கும் பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக தருகின்ற வழக்கம் இன்றளவும் மேற்கு மண்டல பகுதியில் மரபமாக உள்ளது.இவ்வின மாடுகளை அழிவிலிருந்து மீட்கும் வகையில், கால்நடை ஆர்வலர்கள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனின் அவசியத்தை உணர்ந்து, தற்போது வளர்ப்பதில் மக்கள் மத்தியில் ஆர்வம் உள்ளது. பழமை வாய்ந்த சந்தை
காங்கயம் அருகே கண்ணபுரத்தில் பழமை வாய்ந்த மாட்டு சந்தை ஒவ்வொரு ஆண்டும் சந்தைக்கு பெரும்பாலும், காங்கயம் இனமாடுகள் தான் விற்பனைக்கு விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது. தமிழகம் முழுதும் பல இடங்களில் இருந்து விவசாயிகள், பொதுமக்கள் மாடுகள் வாங்க வருகின்றனர்.இப்படி பல்வேறு பழமைகள், பெருமைகளை கொண்ட காங்கயம் காளைக்கு, காங்கயத்தில் சிலை அமைக்க வேண்டும் என்ற பல ஆண்டுகளாக அனைத்து தரப்பும் மத்தியில் கோரிக்கை உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போது, சிலை அமைக்கப்படும் என, அரசியல் கட்சியினர் மத்தியில் வாக்குறுதி கொடுப்பதோடு சரி, வென்ற பின், கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். வெற்று அறிவிப்பு
அ.தி.மு.க., ஆட்சியின் போது, காங்கயம் இன மாடுகளுக்காக, 2.5. கோடி ரூபாய் நிதி கடந்த, 2017 ல் ஒதுக்கப்பட்டது. நினைவு சிலைக்காக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிலையை வைக்கவும், பாதுகாக்கவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. பின், 2020ல் ஆண்டு காளை சிலை அமைக்க அறிவிப்பு மட்டும் வெளியானது. தொடர்ந்து, 2021ல் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய முதல்வர் பழனிசாமி, காங்கயம் ரவுண்டானாவில் காங்கயம் காளைக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலெக்டரிடம் அனுமதி கோரப்பட்டது. அனைத்து துறைக்கும் சிலைக்கான அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், எவ்வித பணியும் நடக்காமல் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது.
காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சாமிநாதனிடம் பலமுறை விவசாயிகள், பொதுமக்கள தரப்பில் கோரிக்கை மனு வழங்கினர். இதனால், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகில் காளை மாடு சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அமைச்சரும் பார்வையிட்டார். இந்த சிலை செய்யும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் மத்தியில் கூறப்பட்டது. ஒரு ஆண்டு ஆகியும், கடந்தாலும், இதுவரை சிலை அமைக்கப்படவில்லை. இன்னும் சில மாதங்களில், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்து விடும் அதற்குள் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, தேவையான நிதியை ஒதுக்கி காங்கயம் காளைகளுக்கு சிலை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
22-Oct-2025