மருத்துவக் காப்பீடு ஏன் அவசியமாகிறது?
எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ற இவ்வுலகில், 'வரும்முன் காப்பதே சிறந்தது' என்ற பழமொழிக்கு ஏற்ப, எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டியது நம் கடமை. திடீரென வரும் நோயும் அதனால் வரும் மருத்துவ செலவுகளையும் கையாள்வது சுமையாக இருப்பதால், காப்பீடு செய்வது அவசியமாகிறது. மருத்துவ காப்பீடு ஆலோசகர் வினோத், நம்மிடம் பகிர்ந்தவை: படித்தவர்களிடம் மருத்துவ காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. அதிகப்படியாக தனியார் நிறுவனங்களும், சில பொது நிறுவனங்களும் மருத்துவக்காப்பீடு வழங்குகின்றன. காப்பீடு நிறுவனங்களின் ஒப்பந்ததார மருத்துவமனையில் கட்டணமில்லா 'க்ளைம்' வழங்கப்படுகிறது. பிற மருத்துவமனைகளில் பணம் செலுத்திய பின் மருத்துவ ஆவணங்கள், பில்கள், சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற முடியும். 30 வயதுக்கு மேல் உள்ளவர் பலர் மருத்துவ காப்பீட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். சில தனியார் நிறுவனங்கள், ஊதியம் கொடுக்கும்போதே பிடித்தம் செய்து காப்பீடுகளை வலியுறுத்துகின்றன. காலவரையறை காப்பீடு எடுத்த நொடியிலிருந்து விபத்து காப்பீடு வழங்கப்படும். ரோட்டில் விழுவது மட்டுமல்லாமல் பாம்பு கடி, படியிலிருந்து தவறி விழுதல் போல திடீர் நிகழ்வு எல்லாவற்றிற்கும் காப்பீடு வழங்கப்படும். 14 நாள் கழித்து காய்ச்சல் போன்ற நோய்களுக்கு காப்பீடு வழங்கப்படும். மூலம், கண்புரை, டான்சில்ஸ் போன்ற சிலவற்றிற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து காப்பீடு பெற முடியும். லேசிக், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அழகு சிகிச்சைகளுக்கு வழங்கப்படாது. குறைந்தது 24 மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். சில நிறுவனங்கள் 'டே கேர்' வசதி வழங்குகின்றன. சிறுவயது முதல்... எல்லோருக்கும் காப்பீடு கிடைத்து விடாது. அவரவர் வயது, உடல்நிலை பொறுத்து கட்டணம் தீர்மானிக்கப்படும். புதிதாக வருபவர், 60 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. தொடர்ந்து புதுப்பித்து வருபவர் மட்டும் 60 வயதுக்கு மேல் காப்பீடு பெறலாம். அதனால் சிறு வயதிலேயே காப்பீடு அவசியம். காப்பீடு எடுக்கும்போது நோய், உடல்நிலை பற்றி சரியாக கூற வேண்டும். இல்லையெனில் அதற்கு காப்பீடு கிடைக்காது. எடுத்ததற்கு பின் சில நோய்க்கு மட்டும் இரு ஆண்டு கழித்து காப்பீடு வழங்கப்படும். 'க்ளைம்' செய்யாவிடில்... காப்பீடு எடுத்து அந்த குறிப்பிட்ட காலத்தில் 'க்ளைம்' செய்யவில்லை என்றால் அடுத்த ஆண்டு புதுப்பிக்கும் போதுசலுகைகள் வழங்கப்படும். முன், புதுப்பிப்பு தொகையில் சலுகை வழங்கினர். இப்போது, கவரேஜ் தொகை உயர்த்தப்பட்டது. சரியாக புதுப்பித்து பத்து ஆண்டுகள் காப்பீடு செய்பவருக்கு எல்லா நோய்க்காப்பீடும் கிடைக்கும். புதுப்பிக்காமல் இடைவெளி விட்டு தொடர்ந்தால், அது புதிய காப்பீடாக கருதப்பட்டு புதுப்பிப்பு சலுகைகள், சில நோய்க்கு 2 ஆண்டு காத்திருப்பு என்று சலுகைகளை இழப்பர். ஜி.எஸ்.டி. நீக்கம்; கட்டணம் குறைந்தது: முன்பிருந்த 18 சதவீத ஜி.எஸ்.டி. நீக்கப்பட்டதால் காப்பீடு கட்டணத்தொகை குறைந்திருக்கிறது. சராசரியாக ஒருவர் 20 ஆயிரம் வருட பிரிமியம் செலுத்துகிறார் என்றால் ஜி.எஸ்.டி.குறைப்பால் அவருக்கு 3 ஆயிரத்து 600 குறைந்து, 16 ஆயிரத்து 400 மட்டும் செலுத்தினால் போதுமானது. - வினோத்: மருத்துவக் காப்பீடு ஆலோசகர்.: