மாநகராட்சி பணிகளில் தொய்வு ஏன்?
திருப்பூர் மாநகராட்சியை முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் தனிக் கவனம் பெற்ற மாநகராட்சி என ஆளும் கட்சியினர் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது கூட நிரப்பப்படாமல் உள்ளதால் பணிகளில் தேக்க நிலை நிலவுகிறது.குறிப்பாக, திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பெறப்பட்டாலும் பணிகள் மேற்கொள்வதில் பெரும் தேக்க நிலை நிலவுகிறது. இதுகுறித்து தி.மு.க., கூட்டணிக்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்: பல பணிகள் பாதியில் நிறுத்தம்
செந்தில்குமார், காங்.,; இது வரை இங்கு பணியாற்றி இடமாற்றம் செய்யப்பட்ட கமிஷனர்கள் உரிய அடுத்த கமிஷனர் வந்து பொறுப்பேற்ற பின்பு தான் இங்கிருந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இம்முறை, கமிஷனர் பணியிடத்துக்கு யாரும் நியமனம் செய்யாமல் பொறுப்புகள் துணை கமிஷனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது மோசமான ஒரு நிலை. பணிகளில் தாமதம், தடை ஏற்படுகிறது. முடிவுகள் எடுத்து செயல்படுத்துவதில் பொறுப்பு அலுவலரிடம் தயக்கம் கட்டாயம் இருக்கும். வளர்ச்சிப் பணிகளைப் பொறுத்தவரை ஏராளமான தொகை ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவையில் உள்ளது. இதனால் பணிகளில் சுணக்கம் உள்ளது. பல பணிகளை பாதியில் நிறுத்தியுள்ளனர்.அதிகாரிகள் மத்தியிலும் துறைரீதியாகவும் ஒருங்கிணைப்பு இல்லாத நிலை உள்ளது. மாநகராட்சியில் வருவாய் பிரிவு செயல்பாடு சரியாகத்தான் உள்ளது. இருக்கின்ற அலுவலர் களை முறையாகப் பயன்படுத்தி பணிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். திடக்கழிவு மேலாண்மை திடமில்லாத முடிவுகள்
ரவிச்சந்திரன், இந்திய கம்யூ.,; திடக்கழிவு மேலாண்மைக்கு இதுவரை எந்த அரசும் நிரந்தரமான, சரியான திட்டத்தை செயல்படுத்தவில்லை கொண்டு வரப்படும் திட்டங்களை தள்ளிப் போட்டு வருகின்றனர். வார்டு பகுதியில் தினமும் நுாற்றுக்கணக்கான டன் கழிவுகள் தினமும் சேகரமாகிறது.பாறைக்குழியில் கொண்டு சென்று கொட்டுவது மட்டும் தீர்வாகாது. இதில் மிகப் பெரிய ெவற்றிடம் உள்ளது. வரி உயர்வு பிரச்னையில் எங்களை பலரும் குறை கூறுகின்றனர். தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறோம். இதற்காக சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசுக்கும் அனுப்பியுள்ளோம்.குப்பை வரியை 2017ம் ஆண்டு முதல் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றியும் அனுப்பியுள்ளோம். இது வரை எந்த தீர்வும் இல்லை. கமிஷனர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் அலுவலர்கள் இல்லை என்பது நிர்வாகத்துக்கு சிரமம்.துாய்மைப் பணியாளர்கள் போனஸ் உள்ளிட்ட பிரச்னைகள் இழுபறியாக உள்ளது. இது போல் பல்வேறு மைனஸ் பாயின்ட்கள் உள்ளன. நிர்வாக ரீதியான நடவடிக்கைகளுக்கு அரசு தரப்பில் ஒத்துழைப்பு இல்லை. நான்காவது குடிநீர் திட்டம் 3 ஆண்டுகளாக முழுமையாக நிறைவேறாமல் உள்ளது. வளர்ச்சிப்பணிகள் தாமதத்துக்கு காரணங்கள்
நாகராஜ், ம.தி.மு.க.,; வளர்ச்சிப் பணிகளைப் பொறுத்தவரை பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்படுகிறது. பணிகளைப் பொறுத்த வரை நேரடியாக நாங்கள் கண்காணிப்பதாலும், வேறு வகையில் ஒப்பந்ததாரர்களை தொந்தரவு செய்யாததாலும், தரம் குறைவு போன்ற பிரச்னை ஏற்படுவதில்லை.கட்டுமானப் பணி நடக்கும் இடங்களில் கியூரிங் முதற்கொண்டு முறையாக நடக்கிறதா என தினமும் நேரடியாகச் சென்று கூட கண்காணிக்கிறோம். அலுவலர் மற்றும் ஊழியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்ப வேண்டும். குறுகிய காலத்தில் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது, பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. வரி உயர்வு போன்ற பிரச்னை அரசின் கொள்கைரீதியான முடிவுகள்.மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம். - நமது நிருபர் -