பல்லடம்: பைபாஸ் ரோடு அமைக்காமல், டோல்கேட் அமைத்தது ஏன்? என, மாதப்பூர் டோல்கேட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். திருப்பூர் மாவட்டம், பல்லடம்- முதல் வெள்ளகோவில், குறுக்கத்தி வரை, தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழி சாலையாக சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, மாதப்பூர் பகுதியில் புதிதாக டோல்கேட் அமைக்கப்பட்டது. ஆரம்பம் முதலே, பல்லடம், பொங்கலுார் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் 'டோல்கேட்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, நாளை (27ம் தேதி) 'டோல்கேட்' பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், நேற்று காலை, நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் டோல்கேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பொதுமக்களிடம் பேச்சு நடத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், 'மாதப்பூர் ஊராட்சியில் வசிக்கும் சொந்த வாகன உரிமையாளர்கள், வாகன பதிவு நகல், ஆதார் உட்பட ஆவணங்களை அளித்து பதிவு செய்து கொண்டால், கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். எனவே, வாகன ஓட்டிகள் முன்கூட்டியே ஆவணங்களை அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள். மற்றபடி, வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்,' என்றனர். இதனைஏற்றுக் கொண்ட விவசாயிகள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.