மேலும் செய்திகள்
மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா
02-Sep-2025
திருப்பூர்; திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், 'மனைவி நல வேட்பு நாள் விழா', காலேஜ் ரோடு, ஸ்ரீநிவாசா மஹாலில் நேற்று நடைபெற்றது. 200 தம்பதியர் பங்கேற்றனர். டாக்டர் சீனியம்மாள் சிங்காரவேலு இறைவணக்கம் பாடினார். பேராசிரியர் முத்துசாமி முன்னிலையில் தவம் நடைபெற்றது. ஜெய் குமார் வரவேற்றார். அறக்கட்டளைத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மெஜஸ்டிக் குழுமம் கந்தசாமி, பழனிசாமி-சுகந்தி முன்னிலை வகித்தனர். திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலாளர் முரளி தலைமையில் உயிர்க்கலப்பு தவம் நடைபெற்றது. கணவரும் மனைவியும் எதிரெதிரே அமர்ந்து, கண்கள் மூடி தியானம் செய்தனர். காப்புக்கயிறு, ஆப்பிள், ரோஜாப்பூ, மாலை போன்றவை ஒவ்வொரு தம்பதியரிடமும் கொடுக்கப்பட்டது; காப்புக்கயிறு கட்டி, மாலை மாற்றிக் கொண்டனர். டபிள்யு.சி.எஸ்.சி., மலேசியா ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் பாலகிருஷ்ணன், வாழ்த்துரை வழங்கினார். திரைப்படத்துறை இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில், கணவன்மார்கள், தங்கள் மனைவியை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மனைவி நல வேட்பு நாள். நாம் சொல்லும் சொல்லுக்கு சக்தி அதிகம். அந்த சொல்லானது இன்சொல்லாக இருக்க வேண்டும். எல்லோரும் பிறக்கும்போது மனிதனாக பிறப்பதில்லை. வாழும்போது, தனது இனிய சொற்களாலும் நல்ல செயல்களாலும் தான் மனிதராக மாறுகின்றனர். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி இனிய சொற்களைப் பேசுங்கள் என்றார். சிறப்பு விருந்தினர்களாக டபிள்யு.சி.எஸ்.சி. துணைத்தலைவர் நாகராஜன், வால்ரஸ் டேவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாராயணன் தொகுப்புரை வழங்கினார். ஆறு முகம் நன்றி கூறினார்.
02-Sep-2025