உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடற்கல்வி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

உடற்கல்வி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

திருப்பூர்; ''மாநில, தேசிய போட்டியில் வெற்றி பெற்று, அரசு பள்ளியை உயர்த்திப்பிடித்து பெருமை கொள்ள செய்யும் வீரர், வீராங்கனையர் மட்டுமின்றி, விளையாட்டு ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலான அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி வெளியிட வேண்டும்'' என்பது விளையாட்டு ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மெச்சத்தகுந்த வகையில் பள்ளி, மாணவ, மாணவியரை, வெற்றி பெற செய்யும் தலைமை ஆசிரியர், பாட ஆசிரியர்களுக்கு, நுாறு சதவீத தேர்ச்சியை எட்டும் போது பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.மாணவரை பள்ளி, குறுமைய, வட்டார அளவில் தயார் படுத்தி, மாநில போட்டியில் வெற்றி பெற செய்து, தேசிய போட்டிக்கு தகுதியுடையவராக மாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு விளையாட்டுத்துறை சார்பில் எந்த கவுரவமும் அளிப்பதில்லை. மாணவர் தேசிய அளவில், எஸ்.ஜி.எப்.ஐ., போட்டிகளில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பாராட்டு, அவரை உருவாக்கிய விளையாட்டு இயக்குனர் மற்றும் விளையாட்டு ஆசிரியருக்கு கிடைப்பதில்லை.உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:கல்வியும், விளையாட்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உடல் நலன் சீராக இருந்தால் மட்டுமே மாணவர் படிப்பில் கவனம் செலுத்த முடியும். இயல்பான உடல்வாகு கொண்ட மாணவ, மாணவியருக்கு, தகுந்த அறிவுரை கூறி, சத்தான உணவு, முறையான பயிற்சியை தொடர்ந்து அளித்து, அவர்களை வீரர், வீராங்கனையாக மாற்றுவது உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்கள் தான்.மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலும் அரசு பள்ளி மாணவ, மாணவியரை மிளிர செய்யும் பணிகளை சிரத்தையுடன் செய்கிறோம். ஆனால், எங்களுக்கான பாராட்டு, கவுரவம் எங்கும் கிடைப்பதில்லை. அரசு பள்ளி மாணவர்களை தேசிய போட்டி வரை அழைத்து செல்லும் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலான அறிவிப்பை விளையாட்டுத்துறை பொறுப்பை வகிக்கும் துணை முதல்வர் உதயநிதி வெளியிட வேண்டும். பள்ளி, மாவட்ட அளவிலாவது ஆண்டுக்கு ஒருமுறை எங்கள் பணியை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை