கோழி எரியூட்டு கலம் அரசு அமைக்குமா?
பல்லடம்; கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:பல்லடம் சுற்றுவட்டார பகுதியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றில், வாரந்தோறும், 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தியாகி விற்பனைக்கு செல்கின்றன. பண்ணைகளில், நோய்வாய்ப்பட்டும், இயற்கையாகவும் இறக்கும் கோழிகள் முறையாக அழிக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில், பொள்ளாச்சி ரோட்டில், இதற்காக, கோழி எரியூட்டு கலம் அமைக்கப்பட்டது.அது பராமரிப்பின்றி பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. மேலும், அதில், தினசரி, 100 கோழிகளை மட்டுமே எரியூட்ட முடியும். பல்லடத்தில் மட்டுமன்றி, கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளிலும், கறிக்கோழி பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இத்தொழிலை பாதுகாக்க, இறந்த கோழிகளை முறையாக எரியூட்ட வேண்டியது அவசியமாகிறது.முறையான எரியூட்டு கலம் இல்லாததால், சிலர், இறந்த கோழிகளை ரோட்டில், வாய்க்கால்களில் வீசுவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில், இறந்த கோழிகளை முறையாக அழிக்கும் நவீன வசதிகள் இருப்பதால், அங்கு இது போன்ற விதிமீறல்கள் நடப்பதில்லை.அவ்வகையில், கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ள பல்லடத்தில், தினசரி, பத்து டன்னுக்கும் அதிகமான இறந்த கோழிகளை எரியூட்ட வசதியாக எரியூட்டு கலம் அமைக்க வேண்டும். கோழிக்கடைகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகளையும் இதில் எரியூட்ட முடியும். பின் கிடைக்கும் கழிவு துகள்களையும் தீவனமாக, உரமாக பயன்படுத்த முடியும்.மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன், பல்லடத்தில், எரியூட்டு கலம் அமைக்கப்பட வேண்டும்.