மேலும் செய்திகள்
ஐகோர்ட் வக்கீல் கொலை; சடலத்தை வாங்க மறுப்பு
30-Jul-2025
திருப்பூர்; தாராபுரத்தில், ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று கோரி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது. தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம் 41; ஐகோர்ட் வக்கீல். கடந்த 28ம் தேதி, தாராபுரத்தில், இவர் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, அவரது சித்தப்பா தண்டபாணி உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தி பிரேத பரிசோதனை செய்யப்பட்ட முருகானந்தத்தின் உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்து விட்டனர். கடந்த, ஆறு நாட்களாக பேச்சு நடத்தியும், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், கொலை வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, முருகானந்தம் தாய் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது. ஐகோர்ட்டில் மனு தாக்கல் ஏன்? முருகானந்தம், உயிருக்கு ஆபத்து இருப்பதாக முன்னதாகவே போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. போலீசார் அலட்சியமாக இருந்துள்ளனர். கொலை நடந்த அன்று, சர்வேயர் அளவீடு செய்ய வருவதாக அழைத்ததன் பேரில் தான் முருகானந்தம் அந்த இடத்துக்கு சென்ற போது கொலை நடந்தது. கொலையில் தண்டபாணியின் மகனையும், உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளையும் சேர்க்கவில்லை. கூலிப்படை இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - வக்கீல் ரகுராம், முருகானந்தத்தின் நண்பர்.
30-Jul-2025