தீபாவளி முடிந்து திரும்பிய தொழிலாளர்கள்; இயல்பு நிலையில் பனியன் நிறுவனங்கள்
திருப்பூர்; சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பிவிட்டதால், பனியன் நிறுவனங்கள், நேற்று முதல் சுறுசுறுப்பான இயக்கத்தை துவக்கிவிட்டன.பரபரப்பான தீபாவளி பண்டிகை, சரவெடியை போல் குறைவிலா உற்சாகத்துடன் நிறைவடைந்திருக்கிறது. திருப்பூரை வாழிடமாக கொண்ட வடமாநில மக்களின், இரண்டாம் நாள் கொண்டாட்டத்துடன், இரட்டை தீபாவளி இனிதே முடிந்திருக்கிறது. பண்டிகை முடிந்து, இயல்புநிலை திரும்ப, உள்நாட்டு விற்பனை பனியன் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, கூடுதலாக ஒருவாரகாலம் தேவைப்படலாம். ஏற்றுமதி நிறுவனங்கள், தங்களது உற்பத்தியை நேற்று வழக்கம் போல் துவங்கிவிட்டன.கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கால ஆர்டர்கள் அனுப்பி முடித்த கையுடன், குளிர்கால ஆர்டர் மீதான உற்பத்தியை துவக்கியிருக்கின்றனர். திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், நேற்று முதல் தங்கள் பணியை துவக்கிவிட்டன.இதனால், நிட்டிங், சாய ஆலைகள், எம்ப்ராய்டரிங், பிரின்டிங் உள்ளிட்ட பல்வகை நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி பணிகளை துவக்க ஆயத்தாகிவிட்டன. தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து, நேற்று முதல், 65 சதவீத தொழிலாளர் பணிக்கு திரும்பிவிட்டனர். குறிப்பாக, வரும் வாரங்களில் சரக்கு அனுப்ப வேண்டிய நிறுவனங்கள், முழு வீச்சில் பணிகளை துவக்கியுள்ளன. வெளிமாநிலங்களுக்கு சென்ற, 10 சதவீத வடமாநில தொழிலாளர்களும் திருப்பூர் திரும்பிவிட்டனர். வெளிமாவட்டங்களுக்கு சென்ற குடும்பங்களும் திரும்பிவிட்டன. இதன்காரணமாக, திருப்பூர் நகரம், மீண்டும் தனது இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது. ஒரு போகம் சாகுபடி
பருவமழை நன்கு பெய்துள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களில் சிலர், தங்கள் நிலத்தில் ஒரு போகம் சாகுபடி செய்து வரலாம் என்றும் தங்கியிருக்கின்றனர். குடும்பத்தில் உள்ள, நடுத்தர வயதுள்ளவர்கள், அங்கேயே தங்கி, விவசாய பணிகளை துவக்கியிருக்கின்றனர்.அறுவடையை முடித்துக்கொண்டு, தை பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பின் திருப்பூர் திரும்பலாம் என, தங்குவது வழக்கம். அதேபோல், சொந்த விவசாய நிலம் இருக்கும் மக்கள், பயிர்சாகுபடி பணியை துவக்கியிருப்பர் என, தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.