உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுாறு நாள் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி! வாழ்வாதாரம் இழக்கும் கிராம மக்கள்

நுாறு நாள் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி! வாழ்வாதாரம் இழக்கும் கிராம மக்கள்

திருப்பூர்: நுாறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு, நான்கு மாதம் சம்பள பாக்கியுள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் வாயிலாக அரசின் கவனம் ஈர்க்க, விவசாய தொழிலாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.கிராம ஊராட்சிகளில் நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், குளம், குட்டை துார் வாருதல், மண் வேலை, ரோட்டோர முட்புதர் அகற்றுவது, நாற்று நர்சரி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு, அரசு உத்தரவுப்படி, தினசரி, 319 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், அவர்களது பணி வரையறையின் படி, 250 முதல், 290 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் காப்பதில், இத்திட்டம் முக்கியப் பங்காற்றி வரும் நிலையில், கடந்த, 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை; இதனால், தொழிலாளர்கள் பாதித்துள்ளனர்.அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க திருப்பூர் மாவட்ட செயலர் பஞ்சலிங்கம் கூறியதாவது:நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு கடந்த, 4 மாதமாக சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தம் ஒரு காரணம்.அதே நேரம், மாநில அரசும், இவ்விவகாரத்தில் பெரும் சிரத்தை எடுக்காமல், நிதி ஒதுக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புவதுடன் அமைதி காக்கிறது. இவ்வாறு மேலோட்டமாக இல்லாமல், நிதி ஒதுக்க கோரி அழுத்தம் கொடுக்க வேண்டும்.சம்பளம் இல்லாததால், நகர்ப்புறங்களை ஒட்டிய கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் நுாறு நாள் திட்டப்பணியாளர்கள், கட்டட வேலை, கோழிப்பண்ணை, பட்டுக்கூடு பண்ணை, பனியன் நிறுவனம், மில் உள்ளிட்ட வேறு வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். ஆனால், ஒதுக்குப்புற கிராமங்களில் வசிக்கும் நுாறு நாள் பணியாளர்கள், அந்த சம்பளத்தை மட்டுமே நம்பியுள்ளனர்; அவர்களின் வாழ்வாதாரம் தான், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, சம்பள பாக்கியை விரைவில் வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, இன்று மாவட்டம் தழுவி, 10 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ