உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம்; சாய ஆலைகளுக்கு பாராட்டு

ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம்; சாய ஆலைகளுக்கு பாராட்டு

திருப்பூர்; திருப்பூரில் ஆய்வு செய்த, சட்டசபை பொது நிறுவன குழுவினர், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பதை வெகுவாக பாராட்டினர்.திருப்பூரில் உள்ள, சாய ஆலைகள், பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வருகின்றன. கடந்த, 2010ம் ஆண்டு முதல் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலமாக, சாயக்கழிவுநீர் வெளியேற்றுவது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது.தினமும், சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும், 13 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது; அவற்றில், 10 கோடி லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி முறையில் மறு பயன்பாட்டுக்கு செல்கிறது. இதன்மூலமாக, தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுப்பது சேமிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்துக்கு வந்திருந்த, தமிழக சட்டசபை பொது நிறுவன குழு, நேற்று மாசுக்கட்டுப்பாடு வாரிய திட்டப்பணிகளை ஆய்வு செய்தது. கணபதிபாளையம் அருகே உள்ள ஜெய்விஷ்ணு கிளாத்திங் என்ற நிறுவனத்தை ஆய்வு செய்தனர்.சாயக்கழிவுநீர் சேகரிப்பு, முதல்நிலை சுத்திகரிப்பு, ஆர்.ஓ., சுத்திகரிப்பு, பிரெய்ன் சொல்யூஷன் பிரித்து எடுப்பது, நிறைவாக 'மிக்சர் சால்ட்' பிரிப்பது, 'ஸ்லெட்ஜ்' கழிவுகள் அகற்றுவது வரையில் விளக்கப்பட்டது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் விஷ்ணுபிரபு மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப பணிகளை விளக்கினர்.சட்டசபை பொது நிறுவன குழு உறுப்பினரான, பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன், தமிழக அரசு 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கி, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உதவியதை நினைவு கூர்ந்தார்.இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கண்காணிப்பில், திருப்பூரில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் வெற்றி கரமாக செயல்படுத்தப்படுவதை, குழுவினர் வெகுவாக பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ