திடக்கழிவு மேலாண்மை பூஜ்ஜியம்; குப்பை மேடுகளாகும் கிராமங்கள்
பல்லடம்; ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து, குப்பை மேலாண்மை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. பல்லடம் வட்டாரத்தில், கரைப்புதுார், கணபதிபாளையம், ஆறுமுத்தாம்பாளையம் கிராமங்களில் மட்டும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கூறிய கிராமங்களில் குப்பை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குப்பை கொட்டுவதற்கு இடம் இன்றி பொது இடங்களிலும், பாழடைந்த கிணறுகள், நீர்நிலைகளில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனால், விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் மாசடைந்து வருகிறது. நகரப் பகுதிகளுக்கு இணையாக, குப்பைகளால், கிராமங்களும் பாழாகி வருகின்றன. திடக்கழிவு மேலாண்மையும் முறையாக செயல்படுத்தப்படாமல், தேவையான துப்புரவு பணியாளர்களும் ஊராட்சிகளில் நியமிக்கப்படாமல், குப்பை மேலாண்மை கேள்விக்குறியாகி வருகிறது. நவீன தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்தி, குப்பை மேலாண்மையை முறைப்படுத்த வேண்டியதுகட்டாயமாகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை ஒன்றிணைத்து, நகரப் பகுதிகளைப் போன்றே, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதுடன், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்கு உண்டான தொழில்நுட்ப கட்டமைப்புகள் மற்றும் கிடங்குகளை உருவாக்க வேண்டும்.