உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / போக்சோ வழக்கில் வாலிபருக்கு விதித்த சிறை தண்டனை ரத்து

போக்சோ வழக்கில் வாலிபருக்கு விதித்த சிறை தண்டனை ரத்து

சென்னை:திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த வாலிபர், அதே பகுதியில் வசித்த 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு சுற்றி உள்ளனர். சிறுமியிடம் பாலியல் உறவு வைத்ததில், அவர் கர்ப்பம் அடைந்தார்.போக்சோ சட்டத்தின் கீழ், வாலிபருக்கு எதிராக ஆரணி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம், கடந்தாண்டு ஜூன் 30ல் போக்சோ சட்டத்தின் கீழ், 20 ஆண்டு சிறை தண்டனையும், 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வாலிபர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சிறுமியுடன் அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் காதலித்தனர். இளம் வயதில் உடல் உறவால் ஏற்படும் விளைவுகள், அதன் தீவிரம் இருவருக்கும் தெரியவில்லை. பின், இரு வீட்டார் சம்மதத்துடன், திருமணம் செய்ததோடு, அதை பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும், தங்கள் திருமண வாழ்க்கையை தொடர அனுமதிக்க வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் என்பதால், மனுதாரரின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சம்பவம் நடந்த போது, சிறுமி வயது 15; மனுதாரருக்கு, 19. ஒரே மாதிரியான சமூக, பொருளாதார பின்னணியை உடைய இருவரும், தற்போது பதின் பருவத்தை எட்டி உள்ளனர். இருவரும் வயதில் சிறியவர்கள், படித்தவர்கள்; அரசு மற்றும் தனியார் துறையில் வேலை தேடுகின்றனர்.தற்போது, இருவரும் திருமணமாகி கணவன்-, மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இரு நபர்களுக்கு இடையேயான காதல் தகராறில், இந்த வழக்கு தொடரப்பட்டு, தற்போது அது தீர்க்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. மேல்முறையீடு மனு ஏற்கப்படுகிறது. 'போக்சோ' நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி