| ADDED : ஜன 26, 2024 12:40 AM
திருவண்ணாமலை:சென்னை, கொளத்துாரை சேர்ந்தவர் மணி, 50, தனியார் நிறுவன தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். நீண்ட நேரம் வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தார்.மீண்டும் சென்னை செல்ல கோவிலிலிருந்து புறப்பட்டு, அரை கி.மீ., தொலைவிலுள்ள பஸ் ஸ்டாண்ட் சென்றார். வழியில் மயக்கம் ஏற்பட்டு, ஒரு கடை முன் மயங்கி விழுந்தார்.அங்கிருந்த மக்கள், அவருக்கு தண்ணீர் கொடுத்தும், மயக்கம் தெளியாத நிலையில் உயிரிழந்தார்.திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்தது ஏன்?
கோவிலுக்கு வரும் பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய முடிவதில்லை. 14 கி.மீ., கிரிவலம் சென்று வந்தவர்களுக்கு, கோவிலில் எவ்வித முன்னுரிமையும் கிடையாது. சுவாமி தரிசனத்திற்கு 5 - 7 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கப்படுவதில்லை.ஆங்காங்கே குடிநீர் என்ற பெயரில் இருந்தாலும், அதை அருந்த முடியாத அளவுக்குத் தான் இருக்கும். இதுபோன்ற பல காரணங்களால் அந்த பக்தர் இறந்திருக்கக் கூடும். எனினும், உடல் கூராய்வு முடிவில் தான் அவருக்கு ஏன் சோர்வு ஏற்பட்டது என்பன போன்ற விபரங்கள் தெரிய வரும்.