உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்த்த விவசாயி மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்த்த விவசாயி மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த விவசாயி மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா கிராமத்தில் உள்ள சிப்காட் விரிவாக்க பணிக்கு, மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக் குடிசை, நெடுங்கல் உள்ளிட்ட, 11 கிராமங்களில், 3,200 ஏக்கர் விவசாய நிலங்கள் அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து, 126 நாட்களாக, கடந்த, நவம்பர் 4ம் தேதி, வரை அப்பகுதி மக்கள், தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்கும் வகையில், அன்று, டி.ஐ.ஜி., முத்துசாமி தலைமையில், எஸ்.பி., கார்த்திகேயன் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை பலவந்தமாக விரட்டியடித்து, போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்திய, 20 விவசாயிகளை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருள், 45, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தேத்துறை பச்சையப்பன், 47, எருமைவெட்டி தேவன், 45, மணிப்புரம் சோழன், 32, மேல்மா திருமால், 35, நர்மாபள்ளம் மாசிலாமணி, 45, மற்றும் குரும்பூரை சேர்ந்த பாக்யராஜ், 38, ஆகிய, 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதில், 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அருள் மீது மட்டும் குண்டர் சட்டம் ரத்து செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதன் அடிப்படையில், 19 விவசாயிகளும் ஜாமீனில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், அருள் என்பவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டமும் ரத்து செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. ஆனால், மேலும், பல்வேறு வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதால், மற்ற வழக்குகளில் விடுவிக்கப்படவில்லை. அதனால் இன்னும் அருள் சிறையிலேயே உள்ளார். குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக, செய்யாறு சிப்காட் மேல்மா கூட்ரோட்டில் விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி