ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழு ஆய்வு
திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட உடல்கள் உருக்குலைந்த நிலையில் இருந்தன. உடற்கூறு ஆய்விற்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.முன்னதாக, மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில், சென்னை ஐ.ஐ.டி., ஓய்வுபெற்ற வல்லுநர்கள் மோகன், நாரயணராவ் மற்றும் பூமிநாதன் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மண்ணை சேகரித்து, அதன் தன்மை குறித்து ஆய்விற்கு எடுத்துச் சென்றனர். ஆய்வின் அறிக்கையை, தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.ஆய்வின்போது, அவர்கள் தெரிவிக்கையில், ''தொடர் மழை பெய்தால், மீண்டும் மண்சரிவு ஏற்படும். லேசான மழையின்போது எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. மலை அருகே வீடுகள் கட்டும்போது, பொதுமக்கள் முன்கூட்டியே பொறியாளர்கள் வாயிலாக ஆய்வு செய்து பணியை தொடங்க வேண்டும்,'' என்றனர்.இந்நிலையில் நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், பொது நிவாரண நிதியில் இருந்து, தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.