காருக்கு வாங்கிய கடனுக்கு தவணை கட்ட பக்கத்து வீட்டில் நகையை திருடியவர் கைது
தண்டராம்பட்டு திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பேராயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அறிவழகன், 43. இவரது மனைவி கனிமொழி, 35. இருவரும் நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள தங்களது விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேந்திரன், 20, அறிவழகன் வீட்டின் வெளியே மறைவாக வைத்திருந்த சாவியை எடுத்து கதவை திறந்து, உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த அரை பவுன் நகையை திருடினார். பின்னர் வீட்டின் சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த அறிவழகன் குடும்பத்தினர். பீரோவில் வைத்திருந்த நகை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த மகேந்திரன், வீடு புகுந்து திருடுவது தெரியவந்தது. இது குறித்து கனிமொழி, வாணாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனிடம் விசாரணை நடத்தியதில், சொந்தமாக கார் வைத்துள்ள மகேந்திரன், அவற்றை வாடகைக்கு விட்டு வருவதும், கார் வாங்கியதற்கான கடனுக்கு மாத தவணை செலுத்த பணம் இல்லாததால், அறிவழகன் வீடு புகுந்து நகையை திருடி சென்று விற்று, தவணை தொகை செலுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரனை நேற்று கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.