ஆற்றில் குளித்த மாணவர் முதலை கடித்து உயிரிழப்பு
திருவண்ணாமலை:சாத்தனுார் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்த மாணவர், முதலை கடித்ததால் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார், திடீர் நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் முனீஸ்வரன், 18; திருவண்ணாமலை அரசு கலைக்கல்லுாரி பி.காம்., முதலாமாண்டு மாணவர். சாத்தனுார் அணை அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில், ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, ஆற்றில் நேற்று காலை, 8:30 மணியளவில் குளித்தார். திடீரென ஆற்றிலிருந்து வந்த ஒரு முதலை, அவரை கடித்தது. இதில், மாணவர் அலறி கூச்சலிட்டதில், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் முதலை தண்ணீருக்குள் புகுந்து மாயமானது. முதலை கடித்ததில் காயமடைந்த முனீஸ்வரன் உயிரிழந்தார். சாத்தனுார் அணை போலீசார், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.