UPDATED : பிப் 01, 2024 07:44 PM | ADDED : பிப் 01, 2024 03:36 PM
தண்டராம்பட்டு :தண்டராம்பட்டு அருகே, ஆலய நுழைவு போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, ஒரு தரப்பினர் கோவில் செல்வதை தவிர்த்து, புதிய கோவில் கட்டி, வழிபாடு நடத்த தொடங்கி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனுார் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒரு தரப்பினர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடத்தி வந்தனர். கடந்தாண்டு பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அந்த கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி கேட்டு, ஆலய நுழைவு போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகம் அனுமதியின் படி, அப்போதையை கலெக்டர் முருகேஷ் மற்றும் எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில், ஆலய நுழைவு போராட்டம் நடத்தியவர்கள், மாரியம்மன் கோவிலுக்குள் சென்றனர். இதனால், வழக்கமாக வழிபட்டு வந்த மற்றொரு தரப்பினர், அக்கோவிலிற்கு அன்று முதல், செல்வதை தவிர்த்தனர். மேலும், தனியாருக்கு சொந்தமான நிலத்தில், புதியதாக கோவில் கட்டி, மாரியம்மன் சிலை மற்றும் அய்யனார் சிலை வைத்த கிராம மக்கள், தைப்பூசத்தன்று, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொங்கலிட்டு, வழிபாடு நடத்த தொடங்கி உள்ளனர்.