தின்னர் குடித்த குழந்தைகள் மூவருக்கு தீவிர சிகிச்சை
வந்தவாசி:அங்கன்வாடியில், தண்ணீர் என நினைத்து 'தின்னர்' குடித்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மீசநல்லுார் அங்கன்வாடி மையத்தில், 25 குழந்தைகள் படிக்கின்றனர். நேற்று காலை, 9:00 மணிக்கு வழக்கம் போல் குழந்தைகள் வந்தனர். அங்கன்வாடி மையத்தில் பெயின்ட் அடிக்கும் பணி நடப்பதால், பெயின்டில் கலக்க, தொழிலாளர்கள் அங்கு தின்னர் வைத்திருந்தனர். இதை குழந்தைகள் சுதர்சன், 4, மதன்ராஜ், 4, விஷ்ணு, 4, ஆகிய மூவரும் தண்ணீர் என நினைத்து குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களிடம் மைய பொறுப்பாளர் கலைமணி விசாரித்ததில், தின்னர் பாட்டிலை காண்பித்து, அதை குடித்ததாக கூறினர். அதிர்ச்சியடைந்த அவர், குழந்தைகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் குழந்தைகளை சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சேர்க்கப் பட்டனர். தெள்ளார் போலீசார் விசாரிக்கின்றனர்.