| ADDED : ஜூன் 18, 2024 12:00 AM
துறையூர் : திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் மதுரை வீரன், 65. கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வந்த அவர், நேற்று அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார். அவரது உறவினர் கிருஷ்ணவேணி மட்டும், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, காலை 5:30 மணிக்கு சொகுசு காரில் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர், வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி, வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்றனர்.வீட்டில் இருந்த பீரோ சாவியை வாங்கி, பீரோவை திறந்து உள்ளே இருந்த 5 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் தங்க ருத்ராட்ச மாலை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, மதுரை வீரனை, வருமான வரி துறை அலுவலகத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறி சென்றனர்.நடைபயிற்சி முடித்து வீட்டிற்கு வந்த மதுரை வீரன், உறவினர் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்தார். அவர் கொடுத்த தகவல்படி, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரித்தனர். வருமான வரி துறை அதிகாரிகள் போல நடித்து, பணம், நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.