உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / உபகரணம் கொள்முதலில் ஊழல் ஓய்வு அதிகாரிகள் மீது வழக்கு

உபகரணம் கொள்முதலில் ஊழல் ஓய்வு அதிகாரிகள் மீது வழக்கு

திருச்சி:திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாய கருவிகள் வாங்கியதில், 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர், துணை இயக்குனர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ், பல்வேறு விவசாய கருவிகள் வாங்க நிதி ஒதுக்கப்படுகிறது. அதன்படி, 2021 பிப்ரவரி முதல் 2023 அக்டோபர் வரை ஒதுக்கப்பட்ட நிதியில், விவசாய கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக, மணப்பாறையை சேர்ந்த விவசாய சங்க பிரமுகர் அப்துல்லா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிய உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் முருகேசன், 62, மாநில திட்ட வேளாண் துணை இயக்குநர் செல்வம், 61, ஆகிய இருவரும், தரமற்ற பொருட்களை வாங்கி, கமிஷன் பெற்றும், உரிய அனுமதி பெறாமல் விவசாய கருவிகள் வாங்கியும், 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவர் மீதும், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை