நெடுஞ்சாலையில் கிடந்த உடல் பாகங்கள் சேகரிப்பு
திருச்சி:திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மணிகண்டம் அம்பேத்கர் நகர் அருகே, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, 50 வயது ஆண் ஒருவர் சாலையை கடந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், உடல் நசுங்கி இறந்தார். இரவாக இருந்ததாலும், பனிப்பொழிவு அதிகம் இருந்ததாலும், அடுத்தடுத்து சென்ற வாகனங்கள் அந்த உடல் மீது ஏறிச் சென்றன.இதனால், இறந்து கிடந்தவர் உடலின் கை, கால் போன்ற பாகங்கள், 0.5 கி.மீ.,க்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதைந்து கிடந்தன. தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற வாகனங்களின் வேகத்தை குறைக்க ஏற்பாடுகள் செய்தனர். பின், ஆங்காங்கே சிதறி கிடந்த உடலின் பாகங்களை சேகரித்து, விபத்தில் இறந்தவர் யார் என்று விசாரிக்கின்றனர்.மணிகண்டம் அருகே, அம்பேத்கர் நகர் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை வளைவாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க மின் விளக்குகள் அமைத்து, வாகனங்களின் வேகத்தை குறைக்க வழி வகைகளை செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.