| ADDED : ஆக 07, 2011 01:59 AM
திருச்சி: திருச்சி சேவா சங்கம் பள்ளியில் இலக்கியமன்றத் துவக்கவிழா நேற்று நடந்தது. விழாவில், பங்கேற்ற திருச்சி சிவா எம்.பி., பேசியதாவது: ஒரு நிமிடம் பார்லிமென்டில் பேச 10 ஆயிரம் ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவாகிறது. அந்த நேரத்தில் மக்களுக்காக நாம் ஏதாவது பேச வேண்டும். நாடு நமக்கென்ன செய்தது? என்பதை விட, நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்? என்று இருக்க வேண்டும். அந்த எண்ணம் உங்களில் தழைத்தால், நான் வந்ததுக்கான நோக்கம் நிறைவேறும். நாம் படிப்பது எதற்கு? படித்து, வேலைக்கு சென்று பொருளீட்டி, மகிழ்ச்சியாக வாழ்வதுக்கு மட்டுமல்ல. நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, சமுதாயத்துக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும். தமிழுக்கு சிறப்பு சேர்க்க வேண்டும். ஆனால், நான் டில்லி சென்றால் ஆங்கிலம் அல்லது மாற்றுமொழியின் துணையோடு தான் நடமாட வேண்டியுள்ளது. மாணவ செல்வங்களாகிய நீங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கோவையை சேர்ந்த இரு மாணவிகள் ஆராய்ச்சி கட்டுரை எழுதினர். அதை படித்துப் பார்த்த அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கழகம், அவர்களை கவுரவிக்கும் வகையில், விண்வெளியில் உள்ள இரண்டு செயற்கைக்கோள்களுக்கு சரண்யா, செந்தளிர் என பெயரிட்டுள்ளது. இது இங்கிருக்கும் உங்களுக்கு மட்டுமல்ல; ஆசிரியர்களுக்கு, ஊடகங்களுக்குக் கூட தெரியாது இவ்வாறு அவர் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் வனஜா உள்பட பலர் பங்கேற்றனர்.