திருச்சி: நில அபகரிப்பு புகாரில் சிக்கி கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட
முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் ஜவுளிக்கடை உரிமையாளர் ஆகிய இருவரும் ஒரு
மாதத்துக்கு பின் நேற்று நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர். அவர்களை வரும்
அக்டோபர் 11ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டது. திருச்சி மாவட்டம்
துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு
புகாரில், முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், துணைமேயர்
அன்பழகன், எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி,
லஷ்மி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர்ராஜீலு உள்ளிட்ட ஒன்பது பேர் கைது
செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதில்,
முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, லஷ்மி சில்க்ஸ்
உரிமையாளர் சுந்தர்ராஜீலு ஆகிய மூவரும் கடலூர் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் நேரு மட்டும் கஸ்டடி மனு விசாரணை, வேறு
வழக்கு என மூன்று முறை திருச்சி நீதிமன்றத்துக்கு வந்து சென்று விட்டார்.
ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, சுந்தர்ராஜீலு ஆகியோருக்கு கடந்த
முறை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம், கடந்த 15 நாட்களுக்கு முன் காவல் நீடிப்பு
செய்யப்பட்டது. இதனால் இருவரும் திருச்சி நீதிமன்றம் வரும் வாய்ப்பை
இழந்தனர். நேற்று காலை பெரியசாமியும், சுந்தர்ராஜீலுவும் திருச்சி
நீதிமன்றத்துக்கு காவல் நீடிப்புக்காக அழைத்து வரப்பட்டனர். ஜே.எம்., 4
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, வரும் அக்டோபர் 11ம் தேதி வரை
சிறையிலடைக்க மாஜிஸ்திரேட் புஷ்பராணி உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரையும்
போலீஸார் மீண்டும் கடலூர் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்
சென்றனர். ஒரு மாதத்துக்கு பிறகு திருச்சி நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட
முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமியை சந்திக்க ஏராளமான தி.மு.க.,வினர்
நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.