| ADDED : ஜன 25, 2024 01:22 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மாதவன், 50. ரவுடியான இவர் மீது, மண்ணச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும், 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று காலை, திருச்சி, திருவானைக்காவல் சன்னிதி தெருவுக்கு பின்புறம் உள்ள தீட்சிதர் தோப்பில், மாதவன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.ஸ்ரீரங்கம் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். போலீசார் கூறியதாவது:மண்ணச்சநல்லுாரைச் சேர்ந்த ரவுடி குணாவின் நெருங்கிய கூட்டாளி மாதவன். நடுமண்டையில் வெட்டி கொலை செய்வதை வழக்கமாக கொண்டவர் என்பதால், 'மண்டைவெட்டி மாதவன்' என்று ரவுடிகளும், போலீசாரும் அழைப்பர். பல ஆண்டுகளாக கூலிப்படையாக செயல்பட்டார்.நேற்று முன்தினம் இரவு தோப்பில் சிலருடன் சேர்ந்து மது குடித்த அவரை, அதிகாலையில் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட விதத்தை பார்க்கும் போது, பழிக்கு பழியாக நடந்த கொலை போல தெரிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.