உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சியில் துவங்கியது ஆப்பரேஷன் அகழி நில அபகரிப்பு கும்பலின் வீடுகளில் சல்லடை

திருச்சியில் துவங்கியது ஆப்பரேஷன் அகழி நில அபகரிப்பு கும்பலின் வீடுகளில் சல்லடை

திருச்சி:திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதியிலும், அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்வோர் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இந்த சம்பவங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மாவட்ட எஸ்.பி., வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி., வந்திதா பாண்டே ஆகியோர் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 25 தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசாரை கொண்டு, திருச்சி மாவட்டத்தில், 'ஆப்பரேஷன் அகழி' என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. முதல்கட்டமாக தனிப்படை போலீசார், பப்லு, கொட்டப்பட்டு ஜெய், பட்டரை சுரேஷ், டேவிட் சகாயராஜ் உள்ளிட்ட 14 பேரின் விபரங்களை சேகரித்தனர்.தொடர்ந்து, 19ம் தேதி மாலை முதல், ஆப்பரேஷன் அகழி என்ற அதிரடி சோதனையை துவக்கினர். பட்டியலில் உள்ளவர்களின் வீடு, அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கந்து வட்டி

அன்று இரவு வரை நடைபெற்ற சோதனையில், அவர்களுக்கு தொடர்பு இல்லாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள 258 நிலம் மற்றும் சொத்து ஆவணங்கள், 68 வங்கி கணக்கு புத்தகங்கள், 75 புரோ நோட்டுகள், 82 நிரப்பப்படாத காசோலைகள், 18 மொபைல் போன்கள், 84 சிம் கார்டு மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இதில், மைக்கேல் சுரேஷ் என்பவர் வீட்டில், 66 அசல் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அவை, சட்ட விரோதமாக கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி தொழில் மூலமாக மிரட்டி பெறப்பட்டவை என்பது தெரிய வந்தது. ஆப்பரேஷன் அகழி சோதனையில், நில விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட எடமலைப்பட்டிபுதுாரைச் சேர்ந்த சந்திரமவுலி என்பவரது வீட்டை சோதனை செய்த போது, அவர் தப்பி ஓடினார். இந்த ஆப்பரேஷனை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், 825 போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நா.த.க., நிர்வாகி

நேற்று முன்தினம், வாத்தலை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், முக்கொம்பு, நடுகரை எல்லீஸ் சோதனை சாவடியில், அதிவேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தினர். அப்போது, எல்லீஸ் பூங்கா சுவரில் காரை மோதி, காரில் இருந்தவர்களில் இருவர் தப்பி ஓடினர். போலீசார், அந்த காரில் இருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், எடமலைப்பட்டிபுதுாரைச் சேர்ந்த சந்திரமவுலி என தெரிய வந்தது. காரை சோதனை செய்த போலீசார், அரிவாள், இரும்பு வாள், கம்பி போன்ற ஆயுதங்களை கைப்பற்றினர்.நாம் தமிழர் கட்சியில் சந்திரமவுலி மாவட்ட பொறுப்பில் இருந்தவர். போலீஸ் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இருவரை தேடி வருகின்றனர்.திருச்சி எஸ்.பி., வருண்குமார் கூறுகையில், ''ஆப்பரேஷன் அகழி சோதனைக்காக மூன்று பட்டியல் தயார் செய்யப்பட்டது. முதல் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு பட்டியலில் உள்ளவர்கள், அடுத்ததாக சோதனை செய்யப்படுவர். ''இந்த தேடுதல் வேட்டையில், நில அபகரிப்பு தொடர்பாக அதிகமான தகவல் பெறப்பட்டுள்ளது. நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை