சிறையில் கைதி சாவு காவலர் சஸ்பெண்ட்
திருச்சி: பெரம்பலுாரை சேர்ந்தவர் சிபின்குமார், 19. கஞ்சா வழக்கில் கைதான இவர், திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்தார். அக்., 24 நள்ளிரவு, சிபின்குமார் சிறை வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததாக கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர். சிபின்குமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, பிரேத பரிசோதனை முடிந்தும், அவரது உடலை குடும்பத்தார் வாங்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில், சிபின்குமார் இறந்த அன்று, அவர் அடைக்கப்பட்டிருந்த பிளாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இன்பேன்ட் ராஜ் என்ற சிறைக்காவலரை, பணியில் மெத்தனமாக இருந்தாக கூறி, சஸ்பெண்ட் செய்து, சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி நேற்று உத்தரவிட்டார்.