உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்பாவை யோகநாதன் காலமானார் கரும்புக்காதலனுக்கு சிபா புகழஞ்சலி

கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்பாவை யோகநாதன் காலமானார் கரும்புக்காதலனுக்கு சிபா புகழஞ்சலி

திருச்சி: அகில இந்திய கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயல் தலைவரும், திருச்சி பதிப்பு தினமலர் ஆசிரியர், டாக்டர் ஆர். ராமசுப்புவின் மாமனாருமான எம்பாவை எஸ். யோகநாதன் நேற்று காலமானார். மயிலாடுதுறை மாவட்டம், மங்கை மடம் ஊராட்சி, எம்பாவை கே.வி.சுப்பிரமணிய அய்யரின் மகன் எஸ்.யோகநாதன்,83. இவரது மனைவி உமாபாலா. இவர்களுக்கு முரளிதரன் என்ற மகனும், நளினி, ரேணுகா, ஜெயஸ்ரீ என்ற 3 மகள்கள் உள்ளனர். ரேணுகா, திருச்சி பதிப்பு தினமலர் ஆசிரியர், டாக்டர் ஆர். ராமசுப்புவின் மனைவியாவார். எம்பாவை எஸ். யோகநாதன், வயது மூப்பு காரணமாக, தான் பிறந்து வளர்ந்த, எம்பாவையில் உள்ள பூர்வீக வீட்டில், நேற்று காலை 11:40 மணிக்கு காலமானார். இறுதி சடங்கு, நாளை செவ்வாய்கிழமை மதியம் 2.00 மணியளவில் நடக்கிறது. செயல் தலைவர் மறைந்த எம்பாவை எஸ். யோகநாதன், அகில இந்திய கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயல் தலைவர், என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை (தலைஞாயிறு) கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ஆகிய பொறுப்புக்களை வகித்து, விவசாயிகளின் நலனுக்காக, பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். திருவெண்காடு பிராமண சங்க தலைவராக, பல ஆண்டுகள் இருந்து பலரது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டியவர். அன்னதான மடமான சந்நியாசி மடத்தை திறம்பட நிர்வாகம் செய்தவர். எம்பாவை கிராமத்தில் உள்ள சர்வ சித்தி விநாயகர் கோயில் அறங்காவலராகவும், தமது ஊரில் ரேணுகாதேவி மாரியம்மன் கோயிலை கட்டிய பெருமைக்குரியவர். இவரது சொந்த நிர்வாகத்தில் மங்கைமடம் வீர நரசிம்மர்கோயில் இருந்தது. பின்னர் அறநிலையத் துறையிடம் ஒப்படைத்தார். 'சிபா' புகழஞ்சலி இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (சிபா) தேசிய தலைவர் விருத்தகிரி, மாநில தலைவர் வாரணவாசி ராஜேந்திரன், பொதுச்செயலாளர் தனபதி,அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி) மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்க தலைவரும், இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் (சிபா) மூத்த தலைவருமான எம்பாவை எஸ். யோகநாதன், கரும்பு விவசாயிகள் பிரச்னைகளில் 16 வயது இளைஞராக பம்பரமாக சுற்றிச்சுழன்று போராட்ட களத்தில் நின்று கரும்பு விவசாயிகளை ஒருங்கிணைத்தவர். கரும்பு விவசாயிகளுக்கும், அரசு- கரும்பு துறை, சர்க்கரை ஆலைகளுக்கும் பாலமாக நின்று எம்பாவை முதல் டில்லி வரை போராடியவர். 'கரும்புக்காதலன்' என எல்லோராலும், 'எம்பாவை' என அன்போடு அழைக்கப்பட்ட எம்பாவை எஸ். யோகநாதனின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். அவரதுமறைவால் வாடும், குடும்பத்தினர், உறவினர்கள்-, நண்பர்கள், கரும்பு விவசாயிகள் அனைவருக்கும் எங்களது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரதுபாதையில், அயராது தொடர்ந்து கரும்பு விவசாயிகளுக்காக பயணிப்போம்.

அனைவருக்கும் அன்பானவர்

ஐதராபாத்: இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் செங்கால்ரெட்டி விடுத்துள்ள இரங்கல் செய்தி: எம்பாவை எஸ்.யோகநாதன், அனைவருக்கும் மிகவும் அன்பானவர். அனைவராலும் நேசத்துடன் மதிக்கப்படுபவர். இந்திய விவசாயிகள் சங்கங்களின்கூட்டமைப்புடனான அவரது தொடர்பு 25 ஆண்டுகளுக்கும் மேலானது. விவசாயிகள் பிரச்னைகளில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறோம். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை