| ADDED : ஆக 17, 2011 02:04 AM
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கின்றது. இங்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பிற மாநில மக்களும் குடியேறி உள்ளனர். உயர்ந்த பதவி வகித்தவர்கள் கூட கடைசியாக ஸ்ரீரங்கத்தில் குடியேறி விடுகின்றனர்.தமிழகத்தில் ராமேஸ்வரம், திருச்செந்தூர், பழனி, கன்னியாகுமரி மற்றும் திருப்பதிக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இருந்து செல்கின்றனர். 'ஆன்லைன்' புக்கிங் சென்டர் திருச்சியில் தான் உள்ளது. முன்பதிவு பக்தர்கள் திருச்சிக்கு செல்ல வேண்டும். வாலிப, நடுத்தர வயதினர் திருச்சிக்கு சென்று முன்பதிவு செய்து விடுகின்றனர். ஆனால், வயது முதிர்ந்தவர்கள் முன்பதிவு செய்வதில் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். வயது முதிர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு பக்தர்களும் ஆன்மிக திருத்தலங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக, ஸ்ரீரங்கத்தில் மேற்கண்ட ஆன்மிக திருத்தலங்களுக்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் புக்கிங் சென்டர் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.