உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 50,000 ஓட்டில் அ.தி.மு.க., வெற்றிபெறும்

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 50,000 ஓட்டில் அ.தி.மு.க., வெற்றிபெறும்

திருச்சி: ''திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும்,'' என்று மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் பேசினார். திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உறையூரில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மாநகர் மாவட்ட செயலாளரும், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மனோகரன், தலைமை பேச்சாளர் நாகையன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ரத்தினவேல், பரமசிவம், முருகையன், நடராஜன், ஜெ., பேரவை செயலாளர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில், எம்.எல்.ஏ., மனோகரன் பேசியதாவது: கடந்த ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில் மக்கள் பல்வேறு வேதனைகளை அடைந்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் எவ்வித அச்ச உணர்வும் இன்றி, மகிழ்ச்சியாக உள்ளனர். கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வினர் பணத்தை கொடுத்து மக்களின் ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என்று பகல் கனவு கண்டனர். அவர்களின் பகல் கனவை மக்கள் பொய்யாக்கி விட்டனர். அ.தி.மு.க., ஆட்சி துவங்கிய சில மாதங்களிலேயே திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு 290 கோடி ரூபாய்க்கு மேல் முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் நடந்த நன்றி அறிவிப்பு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவின் போது, 190 கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்களும், ஸ்ரீரங்கத்தில் விட்டுப்போன பகுதிகளின் பாதாள சாக்கடை திட்டத்துக்கு 3.28 கோடி ரூபாயும், மாவட்ட அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த 100 கோடி ரூபாயும் முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கியுள்ளார். இன்னும் பல நூறு கோடி செலவில் திருச்சி மாவட்டத்தில் நலத்திட்டங்கள் எதிர்காலத்தில் முதல்வரால் அறிவிக்கப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில், முத்தரசநல்லூர் அருகே தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க., ஆதரவாக வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலிலும் ஆதரவாக இருப்பார்கள். திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை