உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

திருச்சி:கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, அதிகமான துாக்க மாத்திரைகளை கொடுத்து கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே சிறு சோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார், 43; விவசாய தொழிலாளி. இவரது மனைவி விஜயா, 36. இவர்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் போது, குமார் முருங்கை கீரை சூப் குடித்து வந்துள்ளார். குமாரின் நண்பரான மண்ணச்சநல்லுார் அருகே சோழங்கநல்லுார் கிராமத்தை சேர்ந்த பாலு, 35, அடிக்கடி குமார் வீட்டுக்கு வந்து சென்ற போது, விஜயாவுடன் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த குமார், விஜயாவை கண்டித்தார். ஆத்திரத்தில் இருந்த விஜயா, செப்., 18ல் குமாருக்கு வயிற்று வலிக்கு வழக்கமாக தரப்படும் முருங்கை கீரை சூப்பை தயார் செய்து, அதில், 20 துாக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். பல மணி நேரம் ஆகியும் குமார் உயிருடன் இருந்ததால், காதலன் பாலுவுடன் சேர்ந்து, குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், எதுவுமே தெரியாதது போல், வயிற்றுவலியால் அவதிப்பட்ட கணவன், பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக கூறி, விஜயா அழுது நடித்துள்ளார். உறவினர்கள், குமார் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். உறவினர் ஒருவர், குமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கூறியுள்ளார். முசிறி போலீசார் விசாரணை நடத்தியதில், விஜயா, பாலுவுடன் சேர்ந்து குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து, விஜயா, பாலுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ