| ADDED : நவ 24, 2025 12:32 AM
திருச்சி: பிரசவத்துக்கு பின் பெண் இறந்தது குறித்து விசாரிக்க, டி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி, அக்ரஹாரத்தை சேர்ந்த ஜான்சன் மனைவி ஜெயராணி. புத்துாரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயராணிக்கு, நவ., 3ல் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பின், ஜெயராணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்ததில், நவ., 11ல் அவர் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால், அவர் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி, உறவினர்கள் அந்த மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். காந்தி மார்க்கெட் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜெயராணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனையில், மூன்று ஆண்டுகளில், இவர் உட்பட நான்கு பேர் இறந்துள்ளனர். அந்த மருத்துவமனையின் சிகிச்சை முறைகள், பிரசவித்த பெண் இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்க, தனி டி.ஆர்.ஓ., தலைமையில், இரு டாக்டர்கள் கொண்ட குழுவை மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது. 'அக்குழு, 15 நாட்களுக்குள் கொடுக்கும் அறிக்கைபடி, அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்' என, மாவட்ட நிர்வாகத்தினர் கூறினர்.