பெண் புகாரில் அலட்சியம் இன்ஸ்., உட்பட மூவர் மாற்றம்
வேலுார்: வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, 21 வயது பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபரும் காதலித்தனர்.திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணை அவர் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அந்த வாலிபருக்கு, மற்றொரு பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டதை அறிந்த இளம்பெண், வாலிபரை தட்டிக் கேட்டதில், தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.வேப்பங்குப்பம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, எஸ்.ஐ.,க்கள், குமார், கோபிநாத் விசாரித்தனர். உரிய நேரத்தில் விசாரித்து வழக்குப்பதிய தவறியதாக, வேலுார் சமூக நலப்பாதுகாப்பு துறையில் இளம்பெண் புகாரளித்தார். அதன்படி, இளம்பெண், வாலிபர் தரப்பை சேர்ந்தவர்களை, கலெக்டர் அலுவலகத்திற்கு எஸ்.பி., மதிவாணன் அழைத்து விசாரணை நடத்தினார்.இதையடுத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் பணியில் அலட்சியம் காட்டியதாக, மூவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.