மேலும் செய்திகள்
ஆம்பூர் கலவர வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு
27-Aug-2025
ஆம்பூர்: ஆம்பூர் கலவர வழக்கில், 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., வின் சொத்துகளை ஜப்தி செய்து, இழப்பை சரிசெய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா, 25. பள்ளிகொண்டாவில், தோல் பதனிடும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 2015- மே 24-ல் மாயமானார். அவரை மீட்டு தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனி மனுதாக்கல் செய்தார். இது தொடர்பாக, ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது, 26, என்பவரிடம், 2015 ஜூன் 15ல் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட ஆறு போலீசார் விசாரித்தனர். பின், அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அனுப்பினர். இந்நிலையில், ஷமீல் அகமதுவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனை, 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு, ஷமீல் அகமதுவை தாக்கிய இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 7 பேர் மீது வழக்கு இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ், எஸ்.எஸ்.ஐ., சபாரத்தினம், காவலர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இது குறித்து விசாரித்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய, அப்போதைய மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டு இருந்தார். விசாரணையில், போலீசாரின் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2015- ஜூன் 27-ம் தேதி இரவு, 7:00 மணியளவில், ஆம்பூரில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திரண்டு, ஷமில் அகமது மரணத்துக்கு காரணமான போலீசாரை கைது செய்து, 'சஸ்பெண்ட்' செய்யக்கோரி கலவரத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியிலிருந்த வேலுார் எஸ்.பி., செந்தில்குமாரி மீது கற்கள் வீசியதில் அவர் காயமடைந்தார். கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதில், 15 பெண் போலீசார் உட்பட, 91 போலீசார் படுகாயமடைந்தனர். கலவரத்தில், 11 அரசு பஸ்கள், 7 போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட, 30 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், 4 பைக்குகள் தீயிட்டும் கொளுத்தப்பட்டன. அன்றிரவு, 8:00 மணிக்கு தொடங்கிய கலவரம் நள்ளிரவு, 1:00 மணி வரை நீடித்தது. பின்னர், ஏழு கட்டமாக, கலவரத்தில் தொடர்புடைய, 185 பேர் மீது, 12 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. தலா 1 லட்சம் இந்த வழக்கில், திருப்பத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி நேற்று தீர்ப்பளித்தார். இதில், விசாரணை நடந்த காலத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., அஸ்லாம் பாஷா உட்பட 6 பேர் உயிரிழந்தனர். வழக்கில் இருந்து 161 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று 22 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. பைரோஷ் அகமது, இர்ஷாத் அகமது ஆகியோருக்கு, 14 ஆண்டு, ஆறு பேருக்கு, 7 ஆண்டு சிறை, மற்ற, 14 பேருக்கு ஓராண்டு முதல், 4 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட தலைமை காவலர் விஜயகுமார், பெண் காவலர் ராஜலட்சுமி ஆகியோருக்கு தலா, 10 லட்சம் ரூபாய், அரசு சாட்சிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. கலவரத்திற்கு தலைமை தாங்கி, பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக மனித நேய மக்கள் கட்சியின் ஆம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., அஸ்லாம் பாஷாவின் சொத்துகளை பறிமுதல் செய்து, நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
27-Aug-2025