மழை நீர் அடைப்பை சரி செய்த மாணவர்கள் விவகாரம் தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஒடுகத்துார்: ஒடுகத்துார் அருகே, பள்ளிக்கட்டத்தில் தேங்கிய மழைநீர் அடைப்பை மாணவர்கள் அகற்றிய விவகாரத்தில், தலைமை ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, சி.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார். வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளி கட்டடத்தின் மேற்புறத்தில் மழைநீர் வெளியேறும் பைப்லைனில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாடியில் இருந்து மழைநீர் வெளியேற முடியாமல் கசிந்து கொண்டிருப்பதை கவனித்தனர். இதனால் மாணவர்களை அழைத்து பள்ளி கட்டடத்தின் மீது ஏறி, சரி செய்யும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி, மாணவர்கள் சிலர், சின்டெக்ஸ் தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ள பைப்பை பிடித்து, ஆபத்தான முறையில் கட்டடத்தின் மீது ஏறி, பைப்லைனில் அடைத்திருந்த குப்பையை அகற்றினர். பின், மாணவர்களை கீழே இறங்கும்படி கூறினர். இதை பார்த்த பெற்றோர் சிலர், 'மாணவர்களை படிக்கத் தான் பள்ளிக்கு அனுப்புகிறோம். மழைக்காலத்தில் கட்டடத்தின் மீது ஏறும்போது வழுக்கி விழுந்தால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதுபோன்ற ஆபத்து நிறைந்த வேலைகளை ஏன் மாணவர்களுக்கு கொடுக்கிறீர்கள்' என கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தலைமை ஆசிரியை சுசீலாவிற்கு நோட்டீஸ் அனுப்பினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேற்று பள்ளி தலைமை ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.