உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / அ.தி.மு.க., - ஐ.டி., அணிக்கு அறிவுரை பொது செயலர் இ.பி.எஸ்., அதிரடி உத்தரவு

அ.தி.மு.க., - ஐ.டி., அணிக்கு அறிவுரை பொது செயலர் இ.பி.எஸ்., அதிரடி உத்தரவு

ஆத்துார், நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, அ.தி.மு.க., ஐ.டி., அணிக்கு, வரும் 27, 28ல், இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரை வழங்க, இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசியல் கட்சிகளில் முதல் முறையாக, 2014ல், அ.தி.மு.க.,வில் தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கப்பட்டது. 2016 தேர்தல் பிரசாரத்தில், ஐ.டி., அணியின் பங்கு பெரிதாக இருந்தது. அதன் பின்னரே, மற்ற கட்சிகளும் ஐ.டி., அணி பிரிவை துவக்கின. அ.தி.மு.க., பொதுச்செயலராக இ.பி.எஸ்., பொறுப்பேற்ற பின், ஐ.டி., அணிக்கு மண்டலமாக பிரித்து நிர்வாகிகளை நியமித்தார். ஆனால், இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. ஜெயலலிதா இருந்தவரை, ஐ.டி., அணி நிர்வாகிகள் தனித்து செயல்பட்டனர்.தற்போது மாவட்ட செயலர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் அவர்கள் இருக்க வேண்டும் எனக் கூறுவதோடு, சமூக வலைதளங்களில் தங்கள் புகழ் பாட வேண்டும் என விரும்புகின்றனர். இதை ஐ.டி., அணி நிர்வாகிகள் விரும்பவில்லை. இதனால், இந்த அணி செயல்பாடின்றி இருந்து வருவதாக, அக்கட்சியினர் புகார் கூறுகின்றனர். அதை உறுதி செய்யும் வகையில் கடந்த, 17ல், கீழடி விவகாரத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சை விமர்சித்து, கார்ட்டூன் மூலம் மோசமான பதிவை, தி.மு.க., ஐ.டி., அணி வெளியிட்டது. இந்த விமர்சன பதிவு குறித்து, சில நாளிதழ்களில் செய்தி வெளியான பின், இ.பி.எஸ்., குறித்து கார்ட்டூன் வந்த விவகாரம் தெரிந்தது. இந்த செய்தியை பார்த்து, இ.பி.எஸ்.,சுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, அ.தி.மு.க., ஐ.டி., அணி நிர்வாகிகளை 'டோஸ்' விட்ட பின், அனைத்து மாவட்டங்களிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.சமூக வலைதளத்தில், தி.மு.க.,-பா.ஜ., கட்சி ஐ.டி., அணியினர் வேகமாக செயல்படும் நிலையில், அ.தி.மு.க., அணி நிர்வாகிகள் அமைதியாக இருப்பது குறித்து கடந்த, 22ல் நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அ.தி.மு.க., மாநில, மாவட்ட, மண்டல ஐ.டி., அணியினருக்கு, வரும் 27, 28ல் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை வழங்க இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து, நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதில், 'வரும், 27ம் தேதி காலை, 10:00 மணியளவில், அ.தி.மு.க., ஐ.டி., அணி மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு, ஐ.டி., அணி மாநில செயலர், மண்டல செயலர், மாவட்ட செயலர் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் ஐ.டி., அணியினர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை