தொடரும் யானைகள் உயிரிழப்பு; வன ஆர்வலர்கள் வேதனை
பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. இதனால் வன சூழலியல் பாதிக்கப்படும் என விலங்குகள் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த தனியாருக்கு சொந்தமான சாத்கர் மலையில், நேற்று தண்ணீர் ஓடை அருகே மூன்று யானைகள் அழுகிய நிலையில் எலும்பு கூடாக கிடந்தன. பேரணாம்பட்டு வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். சட்ட விரோத கும்பல் மேலும், கால்நடை மருத்துவரின் அறிக்கைக்கு பின், யானைகளின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் இரண்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வன ஆர்வலர் தினேஷ் சரவணன் கூறியதாவது: வேலுார் மாவட்டத்தில் அரவட்லா, பேரணாம்பட்டு, சாத்கர் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், அதற்கு இடையூறாக இருக்கும் யானைகளை அவ்வப்போது கொல்வதாக கூறப்படுகிறது. ஆனால், சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விலங்குகளை வேட்டையாடுவோரை கண்டு கொள்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார். முதன்மை தலைமை வன பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து கூறுகையில், ''யானைகள் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்ய, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில், வனத்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார். மின்வேலி அதேபோல, ஈரோடு மாவட்டம், பர்கூர் கிழக்குமலையில், நேற்று முன்தினம் இரவு, ஈரட்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய, 10 வயதான ஆண் யானை, கடை ஈரட்டியை சேர்ந்த விவசாயி வைரன், 50, என்பவரது தோட்டத்தில் புக முயன்றதில், மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. வனத்துறை அதிகாரிகள், வைரனிடம் விசாரிக்கின்றனர்.