உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / வேலுாருக்கு உதயநிதி வருகையால் கலெக்டர் ஆபீசில் நாய்கள் பிடிப்பு

வேலுாருக்கு உதயநிதி வருகையால் கலெக்டர் ஆபீசில் நாய்கள் பிடிப்பு

வேலுார்: வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிலையில், அவர் வருகைக்கு முன்பாக அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை ஊழியர்கள் விரட்டி விரட்டி பிடித்தனர். வேலுார், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு துறைகளின் 30க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. இதனால், ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து செல்வர். கலெக்டர் அலுவலகத்தில் சமீபகாலமாக தெருநாய்கள் தொல் லை அதிகரித்து காணப்பட்டது. மனு அளிக்க வரும் மக்களை இவை துரத்தும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறின. இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி இரண்டு நாள் பயணமாக நேற்று வேலுார் வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதை முன்னிட்டு, நேற்று காலை 11:00 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த தெருநாய்களை ஊழியர்கள் விரட்டி விரட்டி பிடித்தனர். மேலும், அலுவலகத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த டூ - வீலர்களை போலீசார் துாக்கி வீசினர். நேற்று குறைதீர் கூட்டம் நடந்த நிலையில், இந்த பணிகளால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் உதயநிதி நேற்று பங்கேற்று, 24.34 கோடி ரூபாயில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசுகையில், “விடுபட்ட பெண்களுக்கு வரும் டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,” என்றார். இதற்கிடையே, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின் போது, ராணிப்பேட்டையில், காமராஜர் தங்கிய வீடு புதுப்பிக்கப்பட்ட நிலையில், துணை முதல்வர் உதயநிதி நேற்று அதை திறந்து வைத்து பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ