மின் வேலியில் சிக்கிய விவசாயி பலி: பெண் கைது
குடியாத்தம்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பூங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி, 41; விவசாயி. இவருக்கு ஷோபனா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ராஜீவ் காந்தி, அக்., 4 இரவு வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதிக்கு சென்றார். அதன் பின், வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தினர், குடியாத்தம் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே, பூங்குளத்தைச் சேர்ந்த சாந்தி, 55, என்பவரின் நிலத்தில் ராஜீவ் காந்தி சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் கூறுகையில், 'வேட்டைக்கு சென்ற ராஜீவ் காந்தி, எதிர்பாராத விதமாக மின் வேலியில் சிக்கி இறந்துள்ளார். அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி, மர்ம நபர்கள் இழுத்துள்ளனர்; அவர்கள் யார் என விசாரிக்கிறோம்' என்றனர். சட்ட விரோதமாக மின் வேலி அமைத்த சாந்தியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.