விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 25 பேரிடம் 29 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அடுத்த கொம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன்,36; கார் டிரைவர். இவரது உறவினர் ராமு. உளுந்தூர்பேட்டையில் சமூக நலத்துறையில் டிரைவாக பணிபுரிகிறார். அருள்முருகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக திருக்கோவிலூரைச் சேர்ந்த ரியல் ஏஜன்சி புரோக்கர் மனோகர் என்பவரை ராமு அறிமுகம் செய்து வைத்தார்.விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அலுவலக உதவியாளர், எலக்ட்ரீஷியன், அட்டண்டர் வேலை வாங்கி தருவதாக கூறி அருள்முருகனிடம் ரூ.2 லட்சமும், அவரது தம்பி செல்வகுமாரிடம் 1 லட்சம் ரூபாயும் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி மனோகர் வாங்கினார்.
இவர்களின் நண்பர்கள், உறவினர்கள் என 25 பேரிடம் 29 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு 90 நாட்களில் வேலைக்கான உத்தரவு வீடு தேடி வரும் என கூறினார். பணம் கொடுத்து 90 நாட்களுக்கு மேலாகியும் வேலைக்கான உத்தரவு வராததால், கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்னை வட பழநியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் மனோகரை சந்தித்தனர். அங்கு அவரது தொழில் கூட்டாளி விருதுநகர் மாவட்ட ஓய்வு பெற்ற பி.ஆர்.ஓ., திருநெல்வேலியைச் சேர்ந்த பெஞ்சமின்,62 இருந்தார்.தற்போது பணம் இல்லை; வட்டியுடன் செக் தருகிறேன் என கூறி, ஜூன் 27ம் தேதியிட்டு அருள்முருகன், கண்டம்பாக்கம் விவேகன், தடுத்தார்கொண்டூர் முத்து, அன்பு, திருவெண்ணெய்நல்லூர் விஜயலட்சுமி பெயரில் தலா 5 லட்சம் ரூபாய்க்கும், சின்னபாபு சமுத்திரம் பாலுவிடம் 15 லட்சம் மற்றும் வட்டியை சேர்த்து 40 லட்சம் ரூபாய் செக் கொடுத்தார்.
அதனை அனைவருக்கும் பிரித்து தரும்படி கூறினார்.அன்பு மற்றும் முத்து காசோலைகளை வங்கியில் செலுத்தியதில் பணம் இல்லாமல் திரும்பியது.மனோகருக்கு போனில் தொடர்பு கொண்ட போது கிடைக்கவில்லை.இதனால் திருக்கோவிலூரில் உள்ள மனோகர் வீட்டிற்கு சென்றனர். அவரது மனைவி நான்கு நாட்களில் பணம் அனுப்புவதாக கூறினார்.பணம் வராததால் பெஞ்சமினிடம் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். பாதிக்கப்பட்ட 23 பேர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.மனோகர் மற்றும் பெஞ்சமினை சென்னையில் இருந்து அழைத்து வந்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவராஜன் விசாரணை நடத்தினார். இருவரும் மோசடி செய்தது தெரிந்தது.இதையடுத்து மனோகர் மற்றும் பெஞ்சமினை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.