| ADDED : ஜூலை 19, 2024 05:04 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்களை போலீசார் தடுப்புக் காவலில் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா போலீசார், கடந்த ஜூன் 8ம் தேதி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.விசாரணையில், அவர்கள், திருநெல்வேலி மாவட்டம், நஞ்சான்குளத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் ராஜசுந்தரபாண்டி, 27; துாத்துக்குடி மாவட்டம், அக்கநாயக்கன்பட்டி மாடசாமி மகன் ரஞ்சித், 28; என்பதும் தெரிந்தது. உடன் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.இவர்களின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., தீபக் சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பழனி அளித்த உத்தரவின் பேரில், நேற்று ராஜசுந்தரபாண்டி, ரஞ்சித் ஆகியோர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை விழுப்புரம் தாலுகா போலீசார் கடலுார் மத்தியில் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கினர்.