விழுப்புரம்: விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அரசு கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டது.விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதியில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானுார், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 6 சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த 11 லட்சத்து 49 ஆயிரத்து 407 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்.ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரி மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 6:30 மணி வரை படிப்படியாக கொண்டு வரப்பட்டன.தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி தலைமையில் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் 6 தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஓட்டுபதிவு இயந்திரங்களுக்கான ஸ்டிராங் ரூமில் அடுக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, 11:00 மணிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் ஸ்டிராங் ரூமுக்கு சீல் வைக்கப்பட்டது. தேர்தல் அப்சர்வர் அகிலேஷ்குமார் மிஸ்ரா, எஸ்.பி., தீபக்சிவாச், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, ஆர்.டி.ஓ., காஜாஷாகுல் அமீது, தாசில்தார் வசந்தகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 3 அடுக்கு பாதுகாப்பு
ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைகளின் முன், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் உள்ளனர். அதற்கடுத்து, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், அதற்கடுத்து உள்ளூர் போலீசார் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஏ.டி.எஸ்.பி.,க்கள் பெருமாள், தினகரன், ஸ்ரீதரன் மேற்பார்வையில், விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் 150 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கல்லுாரியின் வாயில் பகுதி, பின் பகுதிகள் மூடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.சி.சி.டி.வி., கேமிரா, தீ எச்சரிக்கை அலாரம், ஒலி பெருக்கி போன்றவை அமைத்து, கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. முகவர்கள் வாக்குவாதம்
ஓட்டு எண்ணும் மைய ஸ்டிராங் ரூமுக்கு சீல் வைக்கும்போது, கூட்ட நெரிசல் காரணமாக போலீசார், சிலரை வெளியேற்றினர். அப்போது, வேட்பாளர்களின் முகவர்களாக வந்தவர்கள் வெளியே வந்து, முகவர்களே இல்லாமல், அதிகாரிகள் மட்டும் சீல் வைப்பதாக கோஷமிட்டு, அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சீல் வைக்கப்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.