| ADDED : ஆக 08, 2024 10:53 PM
திண்டிவனம்: 'வணிக நிறுவனங்களின் பெயர்பலகையை தமிழில் வைக்காதவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கடந்த 3 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2023ம் ஆண்டு துபாய் சென்ற முதல்வர் ரூ. 6,100 கோடிக்கும், கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயினில் ரூ.3,440 கோடிக்கும் ஒப்பந்தம் செய்தார். இதுவரை ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை. சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என தெரியவில்லை. முதலீட்டால் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என அரசு தெரிவிக்க வேண்டும்.வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தி.மு.க.,வின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என முடிவெடுத்த தி.மு.க., தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இதை உச்சநீதி மன்றமும், பாட்னா உயர்நீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் இது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும். வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான போராட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும்.வணிக நிறுவனங்களின் பெயர்பலகையை தமிழில் வைக்காதவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் போலீஸ் ஒத்துழைப்புடன் நடக்கும் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரி ஆற்றில் உள்ள மணல் குவாரிகளை மூடவேண்டும். காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிக்கு 11 நாள் கழித்துதான் தண்ணீர் வருகிறது. இதற்கு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதே காரணம். . மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு, சிறுபான்மை மக்களுடன் கலந்து பேசி முடிவெடுத்த பின், வக்பு வாரியத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.