| ADDED : மார் 21, 2024 11:59 AM
வானுார் சட்டசபை தொகுதியில் தி.மு.க., ஒன்றிய சேர்மன், செயலாளர்கள் மீது, கிளை நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.விழுப்புரம் லோக்சபா தொகுதி மீண்டும் வி.சி., கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வி.சி., வேட்பாளராக மீண்டும் ரவிக்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், ஏற்கனவே வானுார் ஒன்றியங்களில் நடைபெறும் பணிகளுக்கு, நெருங்கியவர்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் டெண்டர்கள் பிரித்து கொடுத்துள்ளதால் ஒன்றிய சேர்மன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மீது, கிளையில் உள்ள உடன் பிறப்புகள் சம்பாதிப்பது ஒருத்தர், வேலை செய்வது நாங்களா என கொதிப்பில் உள்ளனர். இதன் எதிரொலியாக கட்சி சார்பில் நடக்கும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகின்றனர். தற்போது லோக்பசா தேர்தலிலும் முழு பங்களிப்பை காட்டுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதிருப்தியில் உள்ள உடன் பிறப்புகளை சரி கட்டினால் மட்டுமே களத்தில் இறங்கி வேலை செய்வார்கள்.இந்நிலையில், நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் நம் கூட்டணி கட்சியினர் தோளோடு தோளாக நீண்ட காலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கின்றனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஓட்டுக்கள் குறைந்தால், பதில் சொல்ல வேண்டியிருக்கும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதனால் வானுார் சட்டசபை தொகுதியில் உள்ள தி.மு.க., நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.