| ADDED : ஜூன் 16, 2024 05:36 AM
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, கிருஷ்ணாபுரம் ஜாபர்பேக் தெருவைச் சேர்ந்தவர் யாகூப் ஷெரிப் மகன் முகமது ஷெரிப், 36; குவைத்தில் மங்காப் பகுதியில் என்.பி.டி.சி., ஸ்டீல் கம்பெனியில் 12 ஆண்டாக போர்மேனாக வேலை செய்து வந்தார். கடந்த 12ம் தேதி குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இறந்தார்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை,40; கடந்த 20 ஆண்டாக வேலை செய்து வந்த இவர், இரண்டு வாரங்களில் சொந்த ஊருக்கு வருவதாக கூறியிருந்த நிலையில், கடந்த 12ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்ததில் உயிரிழந்தார்.இருவரின் உடல்களும் இந்திய விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சென்றிருந்த வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து முகமது ஷெரிப் உடல் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு செஞ்சியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு சார்பில், தாசில்தார் ஏழுமலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மண்டல துணை தாசில்தார் வேல்முருகன், வி.ஏ.ஓ., ராஜேஷ் உடனிருந்தனர். .முகமது ஷெரிப் உடல் நேற்று காலை அடக்கம் செய்யப்பட்டது.சின்னதுரை உடல் நேற்று முன்தினம் நள்ளிரவு முட்டம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். அவரது உடலுக்கு நேற்று காலை அரசு சார்பில் கலெக்டர் அருண்தம்புராஜ், எஸ்.பி., ராஜாராம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன், பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது குடும்ப சம்பிரதாயப்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது.-நிருபர் குழு-