விழுப்புரம் : 'தரமான கல்லுாரியை தேர்வு செய்து, சுயதிறனுடன் படிக்கும் மாணவர்களே இன்ஜினியரிங்கில் சாதிக்க முடியும்' என கல்வி ஆலோசகர் அஸ்வின் அறிவுறுத்தினார்.விழுப்புரத்தில் நடந்த 'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில், கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது:இன்ஜினியரிங் படிப்புகள் அதிகளவு கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்தது தான். அனைத்து கோர்ஸ் முடித்தவர்களையும், அவர்களின் திறமையை வைத்துதான் நிறுவனங்கள் தேர்வு செய்யும்.இன்ஜினியரிங் படிப்புக்கு முதலில் சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது தான் முக்கியம். அதற்காக டாப் 10 ரேங்க்குள் உள்ள கல்லுாரிகளின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல வேலைக்குப் போக வேண்டும், பிளேஸ்மெண்ட் உடனே கிடைக்க வேண்டும் என்றால், மிக முக்கியம், நல்ல கல்லுாரியை தேர்வு செய்வது தான்.இப்போதுள்ள மாணவர்கள் 90 சதவீதம் வேலையை எதிர்பார்த்தும், 5 சதவீதம் உயர் படிப்பை நோக்கியும், 2 சதவீதம் தொழில் முனைவோராகவும் இருக்கின்றனர். உங்களுடைய முதல் தேர்வு நல்ல வேலை வாய்ப்பு வாங்கித் தரும். அதற்கான பயிற்சியளிக்கும் கல்லுாரியாக இருக்க வேண்டும்.படிப்புகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் தேர்வாகவும், அதில் ஐ.டி., - ஏ.ஐ., - ஏ.ஐ.எம்.எல்., போன்றவையும், அடுத்தடுத்த சாய்சாக இருக்கலாம். இதில் 25 கோர்ஸ்கள் வரை உள்ளன. அதற்கடுத்த நிலையில் இ.சி.இ., - இ.இ.இ., மெக்கட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங் என அடுத்தடுத்த தேர்வாக இருக்கலாம்.சுயமாக யோசிப்பவரும், கணிதம் சார்ந்த படிப்பில் முக்கியத்துவம் கொடுப்பவர் இன்ஜினியரிங் துறையில் சாதிக்க முடியும். அடிப்படை கணித அறிவு, கோடிங், லாஜிக் ரிசனிங், ஆங்கில புலமை இருப்பது தான் இன்ஜினியருக்கு அவசியம்.எனக்கு மேக்ஸ் வராது, ஆங்கிலம் வராது போன்ற காரணங்களை கூற வேண்டாம். எல்லாமே பயிற்சி மூலமாக எளிதாக பெற முடியும். இன்ஜினியரிங் படிப்பில் பேசிக் ப்ரோக்ராம் லாங்குவேஜ், சி.பிளஸ், பிளஸ், சி, நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். கணினி கோடிங் நல்ல முறையில் கற்றுக்கொள்ள வேண்டும்.இன்ஜினியரிங் படிப்பில் அரசு வேலைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கு கேட் தேர்வு அவசியம். மத்திய அரசு சார்ந்த 67 பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கும். இந்த கேட் தேர்வுக்கும் இன்ஜினியரிங் படிப்பில் முதல் இரண்டு ஆண்டுகளில் உள்ள 24 சப்ஜெக்ட்கள் படித்தால் நீங்கள் வெற்றி பெற முடியும்.என்ஜினியர்களுக்காண ஐ.இ.எஸ்., தேர்வில், இ.சி.இ., மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங் முடித்த மாணவர்களுக்கு வாய்ப்பு உண்டு. அதில் தேர்ச்சி பெற்றால் உயர் பதவிகளைப் பெற முடியும். யு.பி.எஸ்.சி., தான் அந்த தேர்வையும் நடத்துகிறது.படித்து முடித்து வெளியேறும் போது 67 சதவீதம் பேர் இந்த ஐ.இ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களுக்கு 1.75 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மாத சம்பளம் வரும். இதற்கெல்லாம் அடித்தளம் நன்கு சொல்லிக் கொடுக்கும் கல்லுாரி அவசியம். இலவச கல்வி என்ற அறிவிப்பை நம்பி ஏமாற வேண்டாம். அனைத்து கல்லுாரிகளிலும் ஸ்காலர்ஷிப் திட்டங்கள் உள்ளன. உள்ளூரிலே பாதுகாப்பு என நினைக்காமல் சென்னை போன்ற எந்த நகரங்களிலும் தங்கிப் படிப்பதற்கு தயக்கம் இன்றி சேர வேண்டும்.இவ்வாறு அஸ்வின் பேசினார்.